தமிழகம்

பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை: தனியார் மருத்துவமனை, மருந்து கடைகளில் டாமி ஃபுளூ கேப்சூல் விற்பனைக்கு அனுமதி

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருந்து கடைகளில் டாமி ஃபுளூ கேப்சூல் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனைப்படி இந்த கேப்சூலை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பன்றிக் காய்ச்ச லால் 375 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இந்நோயின் தீவிரத்தால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நோயை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பன்றிக் காய்ச்சல் பரிசோதனை செய்வதற்கு கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உட்பட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 13 தனியார் மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனியார் மையங்களில் பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்கு ரூ.3,750 மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பன்றிக் காய்ச்சலை குணப்படுத்தும் டாமி ஃபுளூ கேப்சூலை அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருந்து கடைகளில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 616 அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருந்து கடைகளில் பன்றிக் காய்ச்சலை குணப்படுத்தும் டாமி ஃபுளூ கேப்சூல் விற்பனை செய்யப்படுகிறது. 10 கேப்சூல் கொண்ட டாமி ஃபுளூ, ரூ.500-க்குள்தான் விற்பனை செய்யப்படும். பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் டாக்டரின் ஆலோசனைப்படிதான் இந்த கேப்சூலை வாங்கி உட்கொள்ள வேண்டும். டாக்டரின் மருந்து சீட்டு இருந்தால்தான் மருந்து கடைகளில் டாமி ஃபுளூ கேப்சூலை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT