தமிழகம்

9-ம் கட்ட விசாரணையை தொடங்கினார் சகாயம்: மீண்டும் கொலை மிரட்டல் கடிதம்

செய்திப்பிரிவு

மதுரையில் 9-ம் கட்ட விசாரணை நேற்று தொடங்கிய நிலையில், கிரானைட் விசாரணை குறித்து உண்மையான அறிக்கையை அளித்தால் கொலை செய்வோம் என சட்ட ஆணையர் உ.சகாயத்துக்கு வந்த மிரட்டல் கடிதம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் நடை பெற்ற கிரானைட் முறைகேடு குறித்து சட்ட ஆணையர் உ.சகாயம் விசாரித்து வருகிறார். ஏற்கெனவே 8 கட்ட விசாரணை நடந்த நிலையில் மேலும் 2 மாதம் அவகாசம் அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 9-ம் கட்ட விசாரணைக்காக சகாயம் நேற்று மதுரை வந்தார். தூத்துக் குடி துறைமுக சுங்கத்துறை உதவி ஆணையர் சுவாமிநாதன் தலை மையில் அதிகாரிகள் சகாயத்தை சந்தித்தனர். துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட கிரானைட் கற்கள் விவரம் அடங்கிய சிடிக்களை சகாயத்திடம் அளித்தனர். 2000-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை குவாரி அதிபர்கள் எவ்வளவு கிரானைட் கற்களை தூத்துக்குடி துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்துள்ளனர் என்ற விவரம் சி.டி.யில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்றுமதி செய்யப்பட்ட கற்களில் மதுரை மாவட்டத்தில் வெட்டி எடுக்கப்பட்டவை எவ்வளவு என விசாரணை நடக்கிறது. இறுதி அறிக்கை தயாரிப்பது குறித்து ஆய்வுக்குழு அதிகாரிகளிடம் சகாயம் ஆலோசனை நடத்தினார்.

மிரட்டல் கடிதம்

சகாயத்துக்கு ஏற்கெனவே கொலை மிரட்டல் கடிதம் வந்தது. தற்போது மேலும் ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இது குறித்து ஆய்வுக்குழு அலுவலர் ஒருவர் கூறுகையில், கடந்த 9-ம் தேதி சகாயம் பெயருக்கு கடிதம் வந்தது. நேற்று கடிதத்தை சகாயம் பிரித்தபோதுதான் அது கொலை மிரட்டல் கடிதம் எனத் தெரிந் தது. கிரானைட் முறைகேடு விசார ணையில் உண்மையான அறிக்கை அளித்தால் கொலை செய்துவிடு வோம் என கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த கடிதம் மதுரை காவல் ஆணையருக்கு அனுப்பப் பட்டுவிட்டது. மதுரை ஆட்சியர் இல.சுப்பிரமணியனுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

மன்னிப்பு கேட்ட பெண்கள்

சகாயம் அலுவலகம் அமைந் துள்ள மகளிர் வணிக வளாகத்துக்கு வாடகை பாக்கி தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை மகளிர் சங்கத்தினர் சகாயம் அலுவலகத்திலும் கடந்த 16-ம் தேதி ஒட்டிவிட்டனர். ஆட்சியர் தலையீட்டால் உடனே நோட்டீஸ் அப்புறப்படுத்தப்பட்டது. நோட்டீஸ் ஒட்டியதற்காக விக்கிரமங்கலம் ஒன்றிய மகளிர் கூட்டமைப்பு நிர்வாகி வாசுகிதேவி உள்ளிட்டோர் சகாயத்தை சந்தித்து மன்னிப்பு கேட்டனர்.

SCROLL FOR NEXT