ஆந்திரத்தில் மூளைச்சாவு அடைந்த இளம் ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அவரது நுரையீரல் விமானத்தில் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கு பொருத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சூரியநாராயணா (27). ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் சாலை விபத்தில் சிக்கிய அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மாலை மூளைச்சாவு அடைந்தார்.
இதை அறிந்ததும் கதறி அழுத அவரது பெற்றோர், மனதை தேற்றிக்கொண்டு மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகள் அகற்றப்பட்டன.
சென்னை மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு அவரது நுரையீரலை பொருத்த திட்டமிடப்பட்டது. இதற்காக சென்னை மருத்துவர்கள் விசாகப்பட்டினம் சென்று, அந்த நுரையீரலை பெற்றுக்கொண்டு விமானத்தில் நேற்று காலை சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு நுரையீரல் கொண்டு செல்லப்பட்டு, அந்த நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
ஆசிரியர் சூரியநாராயணனின் மற்ற உறுப்புகள் ஆந்திர மாநில மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.