தமிழகம்

‘மக்களின் நகரச் செயலாளர்..’ - அதிமுக பாணியில் திமுக நிர்வாகி!

குள.சண்முகசுந்தரம்

‘மக்களின் முதல்வர்’ - புதுச்சேரி காங்கிரஸில் தொடங்கி வைக்கப் பட்ட இந்த முழக்கம் அண்மையில் தமிழகத்தில் அதிமுக-வில் மையம் கொண்டு இப்போது திமுக-வையும் தொற்றிக் கொண்டிருக்கிறது.

வாழும் காமராசராம் தங்களது அண்ணனை முதல்வர் என்றே அழைக்க பிரியப்பட்ட புதுச்சேரி ரங்கசாமியின் ஆதரவாளர்கள் இறக்கிவிட்ட முத்தான வார்த்தைதான் ‘மக்களின் முதல்வர்’ முழக்கம். கடந்த ஆட்சியின் பிற்பகுதியில் புதுச்சேரிக்கு இரண்டு முதல்வர்கள்! ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்திலிங்கம். இன்னொருவர் ‘மக்களின் முதல்வர்’ ரங்கசாமி. பிற்பாடு என்.ஆர்.காங்கிரஸ் கண்ட பிறகும்கூட ‘மக்களின் முதல்வர்’ என்றே சுவரொட்டிகளில் சிரித்தார் ரங்கசாமி.

தமிழகத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாக ஜெயலலிதா பதவி விலகியதைத் தொடர்ந்து அவரை ‘மக்கள் முதல்வர்’ என்றே அழைக்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

இதைப் பார்த்துவிட்டு திமுக தரப்பில் ஒருவர் கிளம்பி இருக் கிறார்! ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி திமுக செயலாளராக இருந்த இஸ்மத் நானா அண்மையில் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக முகமது அலி ஜின்னா என்பவர் புதிய நகரச் செயலாளராக வந்தார். இதை யடுத்து, தன்னை ‘மக்களின் நகரச் செயலாளர்’ என்று தானே சொல்ல ஆரம்பித்திருக்கிறார் இஸ்மத் நானா.

‘ஜெயலலிதாவை ‘மக்களின் முதல்வர்’ என்று சொல்வதை உங்கள் கட்சி விமர்சிக்கும்போது நீங்கள் உங்களை ‘மக்களின் நகரச் செயலாளர்’ என்று போட்டுக் கொள்கிறீர்களே?’ என்று அவரைக் கேட்டபோது, ‘‘ நான் பதவியிலிருந்த காலத்தில் தொண்டி மக்களுக்கு நல்ல காரியங்களை செய்து கொடுத்திருக்கிறேன். அதனால் அவர்களே எனக்கு ‘மக்களின் நகரச் செயலாளர்’ பட்டம் குடுத் துருக்காங்க. அதை ஏத்துக்கிறதுல என்ன தப்பு?’’ என்றார்.

அப்படி என்றால் ஜெயலலி தாவை ‘மக்களின் முதல்வர்’ என்று அழைப்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? என்று கேட்ட போது ‘‘அதை நாங்க எப்படி ஏத்துக்குவோம்? நான் சாதாரண நகரச் செயலாளர்.அவங்க பெரிய அளவுக்கு மக்களுக்குச் சாதனை செய்ததாகச் சொல்லி அவங்க கட்சிக்காரங்க அவங்கள ’மக்களின் முதல்வர்’னு சொல்லிக்கிறாங்க. அதேமாதிரி என்னோட தகுதிக்கு நான் செஞ்ச நல்ல காரியங்களுக் காக என்னை ’மக்களின் நகரச் செயலாளர்’னு தொண்டி மக்கள் சொல்றாங்க’’ என்றார்.

SCROLL FOR NEXT