மகளிருக்கு எதிராக நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமைகள் பெருகி வருகின்றன. அதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது அகில இந்திய மாநாடு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் மூன்றாவது நாளான நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கைவிடவேண்டும். தனியார் மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவக் கல்வியை ஒழுங்குப்படுத்த முறையான அமைப்பு இல்லை. இதனால் மக்களிடம் நிதிச்சுமை திணிக்கப்படுகிறது.
அரசின் புதிய சுகாதாரக் கொள்கையில் அடிப்படை சுகாதாரத்துக்கு அரசு-தனியார் பங்களிப்புக்கு முக்கியத்தும் தரப்படுகிறது. இது மக்களை மேலும் பாதிக்கும். எனவே சுகாதாரத்தை மக்களின் அடிப்படை உரிமையாக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிராக நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமைகள் பெருகி வருகின்றன. அதைக்கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்பயா திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியைகூட முழுமையாக செலவிடவில்லை. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்திய தண்டனை சட்ட திருத்தம் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும். விரைவு நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
சிறுபான்மையினர், அவர்களது வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. வகுப்புவாத சக்திகளின் இத்திட்டத்தை முறியடிக்க மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும்.
அரசியல் சட்டம் அளித்துள்ள பேச்சுரிமை, கருத்துரிமையை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66-ஏ வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
தலித் மக்களுக்கான சிறப்புக் கூறு திட்ட நிதியை அவர்களுக்கு செலவிடும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.