ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட 26-வது வார்டில் அண்மையில் சீரமைக்கப்பட்ட சாலை குடிநீர் குழாய் பதிப்பதற்காக மீண்டும் தோண்டப்பட்டுள்ளது. இதனால், அச்சாலை மீண்டும் சேதமடைந்துள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. மந்தகதியில் நடைபெறும் இந்த பணியால் பெரும்பாலான சாலை கள், தெருக்கள் தோண்டப்பட்டு குண்டும், குழியாக உள்ளன. இப்பணிகள் நிறைவடைந்த சில இடங்களில் மட்டும் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
நகராட்சிக்கு உட்பட்ட 26-வது வார்டில் உள்ள எம்.ஜி.ஆர். சாலை, பாதாள சாக்கடைப் பணி நிறைவடைந்து அண்மையில்தான் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் சாலை மீண்டும் சேதம் அடைந்துள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது: குமரன் நகர் கிழக்கு, பெரியார் நகர், பல்லவன் நகர், லாசர் நகர், ஆனந்தன் நகர், காமராஜ நகர் ஆகிய பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக எம்.ஜி.ஆர். சாலை உள்ளது. ஆவடி ரயில் நிலையம், மார்க்கெட், பேருந்து நிலையம் செல்பவர்கள் என தினமும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
பாதாள சாக்கடைப் பணிகளுக் காக இச்சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதால் சாலை சேதம் அடைந்தது. இதனால், 3 ஆண்டு களுக்கும் மேலாக இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். பொதுமக்க ளின் கோரிக்கையை அடுத்து அண்மையில்தான் இச்சாலை சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், குடிநீர் குழாய் பதிப்பதற்காக கடந்த 2 நாட்களாக குடிநீர் வாரியம் சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகின்றன. இதனால், மீண்டும் இச்சாலை சேதம் அடைந்துள்ளது.
பொதுவாக, இதுபோன்ற பெரிய திட்டப் பணிகள் நடைபெறும் போது, குறிப்பிட்ட பகுதியில் குழாய்கள் பதிக்கப்பட்ட பிறகுதான் அங்கு சாலை சீரமைக்கப்படும். ஆனால், எம்ஜிஆர் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு முன்பே சாலை சீரமைக்கப்பட்டு அதன் பிறகு குடிநீர் குழாய் அமைக்க பள்ளம் தோண்டப்படுகிறது. இதனால், சாலை சேதம் அடைந்துள்ளதோடு, மீண்டும் இச்சாலையை சீரமைக்க இனி எத்தனை ஆண்டுகள் ஆகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே இதற்குக் காரணம் என்று நந்தகுமார் கூறினார்.
இதுகுறித்து, ஆவடி நகராட்சி ஆணையர் மதிவாணனிடம் கேட்ட போது, ஆவடி நகராட்சியில் உள்ள 1,760 சாலைகளில் 1,480 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை திட்டப் பணிகள் சுமார் 70 சதவீதம் நடைபெற்றுள் ளன. எம்.ஜி.ஆர். சாலையில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை இணைப்பதற் காக பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்படுகின்றன. இப்பணிகள் நிறைவடைந்ததும் சாலை சீரமைத்து தரப்படும்’’ என்றார்.