சென்னை சின்னமலை சிக்னல் அருகே போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து இளைஞர்கள் அதிவேகத்தில் சிக்னலை கடந்து சென்றனர்.
இதுகுறித்து உடனடியாக அண்ணா சாலையில் பணியில் இருந்த மற்ற போக்குவரத்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த இளைஞர்களைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மறைமலைநகர் பாலம் அருகே ஒரு மோட்டார் சைக்கிளையும், சைதாப்பேட்டையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பிடித்து அதில் இருந்த 5 இளைஞர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
கைதானவர்களில் தி.நகர் தாமஸ் சாலையை சேர்ந்த லோகேஷ்(19), சரவணன்(20) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவர்கள் தேனாம்பேட்டையை சேர்ந்த மணிகண்டன்(19), கார்த்திக்(18), தர்(18) ஆகியோருடன் பைக் ரேஸில் ஈடுபட்டது தெரியவந்தது.
கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து நந்தனம் சிக்னல் வரை இவர்கள் ரூ.5 ஆயிரம் பந்தயம் கட்டி ரேஸ் விட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.