கிருஷ்ணகிரி அருகே குந்தராப் பள்ளியில் பேங்க் ஆப் பரோடா வங்கி கிளை உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் சிலர் வங்கியினுள் நுழைந்து ரூ.12 கோடி மதிப்புள்ள 6038 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய கிருஷ்ணகிரி எஸ்பி கண்ணம்மாள் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஜார்க்கண்ட், பிஹார், ராஜஸ்தான், மேற்குவங்கம், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஒருவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலத்தில் தனிப்படை போலீஸார் பிடித்து விசாரணை செய்து வந்தனர்.
விசாரணையில் அவர் உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷாநவாஸ் (49) என்று தெரியவந்தது. அவர் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் அடிவாளம் பகுதியில் வசித்து வந்துள்ளார். தனது கூட்டாளிகள் சிலருடன் வங்கி கொள்ளையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் ஷாநவாஸை கைது செய்து நேறறு முன்தினம் இரவு கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் நீதிபதி ராஜாகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் போலீஸ் காவலில் விசாரிக்க மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து முகமது ஷாநவாஸை 12 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். இதையடுத்து கைது செய்யப்பட்ட முகமது ஷாநவாஸிடம் விசாரணை செய்யவும், நகைகளை மீட்கவும், பெங்களூர் வழியாக விமானத்தில் டெல்லி அழைத்து செல்லப் பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் சிலர் கூறும்போது, வங்கி கொள்ளையில் குற்றவாளிகளைப் பிடிக்க சென்ற தனிப்படை போலீஸார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் களிடம் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு சிறு, சிறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் சிக்கினர்.
இதேபோல் வெளிமாநில வங்கிகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை தனிப்படை போலீஸார் பிடித்து, அவர்களிடமிருந்து சுமார் 5 கிலோ தங்க நகைகளை மீட்க அம்மாநில போலீஸாருக்கு தமிழக போலீஸார் உதவியாக இருந்துள்ளனர்.
ஆனால், குந்தராப்பள்ளி வங்கி கொள்ளையில் இதுவரை ஒரு குற்றவாளி மட்டுமே பிடிபட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு துளி தங்கம்கூட மீட்கப்படவில்லை. இச் சம்பவத்தில் மேலும் தொடர்புடைய 6 குற்றவாளிகளைத் தேடி வருவதாகவும், நகைகள் விரைவில் மீட்டு ஒப்படைக்க உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.