புழுதிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ஒப்பந்ததாரரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
சென்னை புழுதிவாக்கம் பாலாஜி நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஓட்டலில் சாப்பிடச் சென்ற ஒரு இளைஞர் பலியானார். ஓட்டல் உரிமையாளர் ஜெயராஜ் இடிபாடுகளுக்குள் சிக்கி பின்னர் மீட்கப்பட்டார். கட்டிடம் இடிந்தபோது மேல் தளத்தில் உள்ள வீட்டில் வாடகைக்கு இருந்த சிவகுமார், மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
மடிப்பாக்கம் உதவி ஆணையர் குமார் தலைமையிலான காவலர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். தரமில்லாத கட்டிடத்தை உருவாக்கியதாக கட்டிட உரிமை யாளர் முகமது மீரான் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். கட்டிட ஒப்பந்ததாரரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
பாதாள சாக்கடை மற்றும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக பள்ளம் தோண்டப் பட்டுள்ளதால் தான் கட்டிடம் இடிந்ததாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அப்பகுதியில் உள்ள மற்ற கட்டிடங்கள் எல்லாம் உறுதியாக உள்ளன. தரமில்லாததால் கட்டிடம் இடிந்ததா அல்லது பள்ளம் தோண்டப்பட்டதால் இடிந்ததா என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. உடைந்த கட்டிட பாகங்கள் சில ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.