இந்திய உளவுத்துறையை குற்றம் சாட்டிய இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சவை பிரதமர் மோடி அரவணைப்பது ஏன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கை அதிபர் தேர்தலில் தான் தோல்வியுற்றதற்கு இந்திய உளவு அமைப்பான ‘ரா’வும் ஒரு காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்ச குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட் டின் மூலம் இந்தியாவை பாதுகாக் கும் உளவுத்துறையை அவர் களங்கப்படுத்தியுள்ளார். ராஜபக்சவின் இந்தக் கருத்தை இந்திய தரப்பிலிருந்து யாரும் மறுக்கவோ, ஆட்சேபிக்கவோ இல்லை. இதை விட இந்தியாவுக்கு வேறேதும் அவமானமும் தலைகுனிவும் உண்டா?
125 கோடி பேர் வாழும் இந்தியாவின் உளவுத்துறையை 2 கோடி பேர் வாழும் இலங்கையின் முன்னாள் அதிபர் கொச்சைப்படுத்தியுள்ளார். இதற்கான தைரியம் அவருக்கு எங்கிருந்து வந்தது? ராஜபக்சவை கண்டிக்க வேண்டிய இந்திய பிரதமர் மோடி, அவரை தனிமையில் சந்தித்து பேசியது ஏன்?
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவை தோற்கடித்தது 25 லட்சம் தமிழர்களின் வாக்குகள்தான். தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களின் உரிமைகள், உடைமைகளை பறித்த ராஜபக்சவை நரேந்திர மோடி அரவணைப்பது ஏன்? சீனாவின் நண்பரும், தமிழர்களின் எதிரியுமான ராஜபக்சவை மோடி தாங்கிப் பிடிப்பதன் ரகசியம் என்ன? இதைவிட தமிழர்களுக்கு வேறேதும் பெரிய துரோகத்தை செய்திட முடியுமா?
இவ்வாறு அறிக்கையில் இளங்கோவன் கூறியுள்ளார்.