சிறுநீரகப் பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 2-வது வியாழக்கிழமை ‘உலக சிறுநீரக தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை மேடவாக்கத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் இ.ரவிச்சந்திரன் தலைமையில் இம்முகாம் நடந்தது. இதில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சிறுநீரக இயல் துறைத் தலைவர் டாக்டர் என்.கோபாலகிருஷ்ணன், பேராசிரியர் டாக்டர் பால கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், ரத்தம் ஆகியவற்றைப் பரிசோதனை செய்தனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்களிடம் மருத்துவர்கள் இ.ரவிச்சந்திரன், கோபாலகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் கூறியதாவது:
சிறுநீரகம் செயலிழப்பால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகரித்துள்ளது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவையே சிறுநீரக செயலிழப்புக்கு முக்கிய காரணம். அடிக்கடி சிறுநீர் கழிப்பது நல்லது என்று பரவலாக ஒரு கருத்து உள்ளது. அது தவறு. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பவர்கள் சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கண்டிப்பாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். சத்துள்ள உணவு களைச் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.