பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அருண் செல்வராஜ் உள்ளிட்ட 2 பேர் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக தமீம் அன்சாரி மற்றும் அருண் செல்வராஜ் ஆகியோரை தேசிய புலனாய்வு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த 2 பேர் மீதும், 4 ஆயிரத்து 10 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு போலீஸார் நேற்று தாக்கல் செய்தனர். இதில், 125 ஆவணங்களும், 140 சாட்சியங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதால், அருண் செல்வ ராஜ் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
அவரை மீண்டும் ஏப்ரல் 9-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, அருண் செல்வராஜ் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 11-ம் தேதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார்.