ரயில்வே துறை தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயில்வே தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் 2013-ல் 5,450 குரூப் ‘டி‘ பிரிவு பணியாளர் தேர்வுக்கு விளம்பரம் செய்திருந்தது. நவம்பர் 2014-ல் தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வு தொடர்பான ஆங்கில விளம்பரத்தில், விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டிய சான்றி தழ்களில் அரசிதழில் இடம்பெற்ற அலுவலரின் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும் என்றும், தமிழ் விளம்பரத்தில் சான்றொப்பம் தேவையில்லை என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. தமிழில் தயாரிக்கப்பட்ட கேள்வித் தாளில் தவறான மொழி பெயர்ப்புகளால் தமிழக மாணவர்களால் சரியாக விடை எழுத முடியவில்லை. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வில் வெற்றிபெற்றுவிடக் கூடாது என்று திட்டமிட்டு திரைமறைவில் காரியங்கள் நடைபெற்றுள்ளன.
இத்தேர்வு செல்லாது என்று அறிவித்து, தெளிவாக விளம்பரம் செய்யப்பட்டு மீண்டும் தேர்வை நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.