மரக்காணம் அருகே பள்ளிக்கூட நுழைவுவாயில் வளைவு இடிந்து விழுந்து 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வட அகரம் கிராமத்தைச் சேர்ந்த கந்தன் என்பவர் மகன் கார்த்திக்(10). இவர் அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்றார் கார்த்திக். பள்ளிக்கூட கேட்டை திறந்து உள்ளே செல்ல முயன்றார். அப்போது அலங்கார வளைவுடன் கூடிய கான்கிரீட் சுவர் இடிந்து கார்த்திக் மீது விழுந்தது. இதில் மாணவன் கார்த்திக் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வடஅகரம் கிராம மக்கள் வந்து பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இறந்த கார்த்திக் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவன் கார்த்திக் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், பசுமை வீடு ஒதுக்கி தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து திண்டிவனம் மற்றும் மரக்காணம் வட்டாட்சியர்கள் ஜெயச்சந்திரன், வெற்றிவேல் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், பொதுமக்கள் ஏற்கவில்லை. இதையடுத்து செல்போன் மூலமாக மாவட்ட ஆட்சியரிடம் வட்டாட்சியர்கள் பேசினர். பின்னர், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஆட்சியர் சம்பத் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தனர். அதன் பிறகு, கார்த்திக் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதற்கு கிராம மக்கள் சம்மதித்தனர். மேலும், இதுதொடர்பாக, மரக்காணம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
பள்ளிக்கூட விபத்து தொடர்பாக தலைமை ஆசிரியை சிவசங்கரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்க்ஸ்ஸை தொடர்புகொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:
பள்ளியில் நுழைவுவாயில் வளைவு 2011-12ம் நிதியாண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் அப்பள்ளி தலைமையாசிரியர் மூலம் கட்டப்பட்டது. தற்போது பள்ளியில் அப்போதைய தலைமை ஆசிரியர் பணியில் இல்லை. மேலும் இது தொடர்பாக அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் அறிக்கை கேட்டுள்ளோம். அந்த அறிக்கையின் அடிப்படையில் அப்போது பணியில் இருந்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.