தமிழகம்

பெண்களுக்காக 2 புதிய உடற்பயிற்சிக் கூடம்: சென்னை மாநகராட்சி விரைவில் தொடங்கவுள்ளது

செய்திப்பிரிவு

சென்னையில் பெண்களுக்கான 2 புதிய உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்கப்படவுள்ளன. ஏற்கெனவே உள்ள உடற்பயிற்சிக் கூடங்களுக்கு 23 பயிற்றுநர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர்.

சென்னையில் மொத்தம் 234 உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளன. இவற்றில் 96 மட்டுமே பயன்பாட்டில் உள்ளன என்று மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது. இந்த உடற்பயிற்சிக் கூடங்களுக்கு 8 பயிற்றுநர்கள் மட்டுமே இருப்பதால் அவர்களால் மேற்பார்வை பணிகளை மட்டுமே செய்ய முடிகிறது.

இந்நிலையில் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும் என்று 2007-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. கோபாலபுரத்தில் பெண்களுக்கான முதல் உடற்பயிற்சிக் கூடம் கட்டப்பட்டு 2010-ம் ஆண்டில் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பின்னர் புரசைவாக்கம் அருகே கொசப்பேட்டையிலும், வியாசர்பாடி சர்மா நகரிலும் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்கப்பட்டன. இவற்றுக்கு நல்ல வரவேற்பு இருந்த போதிலும், பயிற்றுநர்கள் பற்றாக்குறையால் ஆர்வமுள்ள பெண்கள் கூட தொடர்ந்து உடற்பயிற்சிக் கூடங்களுக்கு வருவதில்லை. சிஐடி நகரில் திறக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடமும் போதிய பெண்கள் வராததால் மூடப்பட்டுவிட்டது.

தற்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்துக்கு அருகிலும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஜெ.ஜெ. உள்விளையாட்டு அரங்க வளாகத்திலும் பெண்களுக்காக மேலும் 2 புதிய உடற்பயிற்சிக் கூடங்கள் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “புதிதாக 23 பயிற்றுநர்களை பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளோம். அவர்களில் 33 சதவீதம் பெண் பயிற்றுநர்களாக இருப்பார்கள். பயிற்றுநர்கள் வாரம் ஒரு உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்று பயிற்றுவிப்பார்கள். அவர்கள் வந்த பிறகு உடற்பயிற்சிக் கூடங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த பயிற்சிகளுக்கு எந்த வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை” என்றார்.

SCROLL FOR NEXT