கிரானைட் முறைகேடு வழக்கில் கிரானைட் அதிபர்கள் இருவருக்கு ஜாமீனும், 7 ஊழியர்களுக்கு முன்ஜாமீனும் உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கியது. கிரானைட் அதிபர்கள் 3 பேர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கிரானைட் மோசடி தொடர்பாக மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் பலர் மீது வழக்குப் பதிவு செய்து பலரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் பலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கிரானைட் அதிபர்கள் நாகூர்ஹனீபா, சோலைராஜன் ஆகியோர் ஜாமீன் கேட்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இவற்றை நீதிபதி பி.என்.பிரகாஷ் நேற்று விசாரித்தார்.
விசாரணைக்குப் பிறகு நாகூர்ஹனீபா ரூ.10 லட்சமும், சோலைராஜன் ரூ.50 லட்சமும் மதுரை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். இருவரும் 4 வாரங்களுக்கு குற்றப்பிரிவு அலுவலகத்தில் தினமும் காலை கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
இதே வழக்கில் கிரானைட் அதிபர்கள் பி.பெரியசாமி, பி.கிருஷ்ணமூர்த்தி, பி.அருண் ராஜா, ஊழியர்கள் பிரபாகர், ஸ்டாலின், மாரிமுத்து, கருணாநிதி, குமரேசன், பொன்ராஜ், ராமநாதன் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
கிரானைட் அதிபர்கள் பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி, அருண்ராஜா ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதி, கிரானைட் முறைகேட்டில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்பதை மனுதாரர்கள் நிரூபிக்கவில்லை. எனவே, அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்தார்.
ஊழியர்கள் 7 பேருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. அவர்கள் 4 வாரங்களுக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தார்.