தமிழகம்

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு விதிமுறைப்படிதான் அங்கீகாரம்: தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு (டி.என்.ஏ.ஏ.) பார் கவுன்சில் விதிமுறைப்படிதான் அங்கீகாரம் வழங்கப்பட்டது என்று தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பார் கவுன்சில் கூட்டரங்கில் நேற்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதி சட்டம் 1987-ன்படிதான் புதிய வழக்கறிஞர்கள் சங்கம், நீதிமன்ற ஸ்டாம்ப் விற்பனை செய்ய அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு அங்கீகாரம் கோரி விண்ணப்பித்தபோது இரண்டு தடவை நிராகரிக்கப்பட்டது. ஏனென்றால், இவர்களால் தமிழ் நாடு முழுவதும் ஸ்டாம்ப் விற்க முடியாது என்பதால் அவர்களது விண்ணப்பத்தை நிராகரிக்கும்படி பார் கவுன்சில் அமைத்த குழு பரிந்துரைத்தது.

அதன்பிறகு தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் மட்டும் நீதிமன்ற ஸ்டாம்ப் விற்பனை செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதையடுத்து, அந்த சங்கத்தின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, பார் கவுன்சில் விதிமுறைப்படி பொதுக்குழுவைக் கூட்டி, உறுப்பினர்கள் 25 பேரில் 23 பேரின் ஆதரவு இருந்ததால் தான், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் துக்கு அங்கீகாரம் வழங்கினோம். இதில், எவ்வித சட்டமீறலோ, உள்நோக்கமோ கிடையாது.

244 சங்கங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் தற்போது 244 வழக்கறிஞர் சங்கங்கள் உள்ளன. தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் துக்கு அங்கீகாரம் வழங்கியதை மட்டும் எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவது ஏன் என்று புரியவில்லை? தேவைப்பட்டால் இந்திய பார் கவுன்சிலில் முறையிடலாம் அல்லது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அதைவிடுத்து போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது.

தமிழ்நாட்டில் உள்ள 87 ஆயிரம் வழக்கறிஞர்களுக்கும் பார் கவுன்சில் பாதுகாப்பு அளிக்கும். போராட்டம் என்ற பெயரில் வரம்புமீறி செயல்படும் வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு செல்வம் கூறினார்.

புறக்கணிப்பு போராட்டம்

இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனக ராஜ் நேற்று கூறுகையில், ‘‘தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் துக்கு வழங்கப்பட்ட அங்கீ காரத்தை ரத்து செய்யக் கோரி வரும் 20-ம் தேதி நீதிமன்ற புறக் கணிப்பு போராட்டமும், பேரணி மற்றும் பார் கவுன்சில் முற்றுகை போராட்டமும் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT