தமிழகம்

மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கண்காணிக்க நீலகிரியில் 8 சோதனைச் சாவடிகளில் நவீன கேமராக்கள், மின் விளக்குகள்

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கண்காணிக்க, கேரள – கர்நாடக மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக எல்லை சோதனைச் சாவடிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், மின் விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன.

கேரள - கர்நாடக மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் பகுதிகள். கேரளா மாநிலத்தில் வயநாடு, மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களிலும், கர்நாடக மாநிலத்தில் குடகு, ஷிமோகா, குதிரேமுக் உள்ளிட்ட பகுதிகளிலும் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.

தமிழக - கேரள மாநில எல்லையிலுள்ள கேரளத்துக்கு உட்பட்ட முண்டேரி, கருவாடுகுன்னு பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ளதாக, கேரள அரசே அறிவித்துள்ளது. இதையடுத்து, கூடலூர் அருகே பிதர்காடு, கிளன்ராக், சுல்தான் பத்தேரி, நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், மர்ம நபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க, நீலகிரி மாவட்ட எல்லையிலுள்ள தாளூர், பாட்டவயல், சோலாடி, நம்பியார்குன்னு, அய்யன்கொல்லி, நாடுகாணி, கக்கநல்லா உட்பட 8 சோதனைச் சாவடிகளில், ரூ.10 லட்சம் செலவில் நவீன கேமராக்கள், அதிக ஒளியுடைய விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன.

இதில் பதிவாகும் காட்சிகள், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காண முடியும். இதன் மூலமாக, மாவோயிஸ்ட், மர்ம நபர்கள், வனக் கொள்ளையர்கள் போன்றோரின் ஊடுருவலைத் தடுக்க முடியும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT