தமிழகம்

நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு நிரந்தர தடை கோரி கிராம மக்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு அமையம் அமைப்பதை நிரந்தரமாக தடை செய்யக் கோரி 7-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மதிமுக பொதுச் செயலர் வைகோ, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியத் தின் அனுமதியைப் பெறும்வரை நியூட்ரினோ ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இந்நிலையில், நியூட்ரினோ ஆய்வு அமையம் அமைப்பதை நிரந்தரமாக தடை செய்யக் கோரி 7-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொட்டிபுரம், டி.புதுக்கோட்டை, சின்ன பொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம், தேவாரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆய்வு மையம் அமையவுள்ள மலைப்பகுதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை காவல்துறையினர் அங்கிருந்து வெளியேற்றினர். அதனைத் தொடர்ந்து, டி.புதுக்கோட்டை கிராமத்தில் மீண்டும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட மறுத்தால், அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT