2015- 16ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை 'அம்மாவில் ஆரம்பித்து, அம்மாவிலேயே முடிந்திருக்கிறது'. இந்த நிதிநிலை அறிக்கையை பொறுத்தவரை பூஜ்ஜியம் தான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' தமிழகத்தின் முதலமைச்சராக கருதப்படுகிற ஓ. பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கை என்றபோர்வையில் மூச்சுக்கு மூச்சு அம்மா, அம்மா என்று துதிபாடி மகிழ்ந்திருக்கிறார். இந்தியாவிலேயே எந்த நிதியமைச்சரும் இவ்வளவு துதிபாடி நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்திருக்க மாட்டார்கள்.
மத்திய அரசின் வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியின் பங்கு 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறி, வரவேற்பு அறிக்கை வெளியிட்ட ஓ. பன்னீர்செல்வம் இன்றைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை என்று ஒப்பாரி வைப்பது ஏனென்று தெரியவில்லை.
டெல்லி மாநிலங்களவையிலே மத்திய அரசுக்கு ஆதரவு, நிதிநிலை அறிக்கையிலே ஒப்பாரி என்று இரட்டை வேடம் போடுகிற அதிமுக வின் நிதிநிலை அறிக்கையில் உருப்படியான திட்டங்கள் எதுவும் இல்லை. நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி தமிழக அரசின் மொத்த நிலுவைக் கடன் 2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி ரூபாய்.
பொதுத்துறை நிறுவனங்கள் கடனையும் சேர்த்தால் 4 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி, அதல பாதாளத்தில் தமிழக அரசின் நிதி நிலைமை விழுந்து கிடக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் கடனாளியாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தை தூக்கி நிறுத்துவதற்கு எந்தவிதமான அறிகுறியும் தற்போது தெரியவில்லை. கிட்டத்தட்ட தமிழக அரசு திவாலான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இதை யாராலும் காப்பாற்ற முடியாது.
தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் படித்த இளைஞர்கள் 85 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிற எந்த திட்டமும் இல்லை. தமிழகத்தில் பெருகிவிட்ட லஞ்ச லாவண்யத்தை ஒழிப்பதற்கு எந்த வழிமுறையும் இல்லை. நாள்தோறும் நாளேடுகளில் இன்றைய நிலவரம் என்ற தலைப்பில் ஆதாயத்திற்காக படுகொலைகள், வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு, ஆள் கடத்தல், தாலிப் பறிப்பு போன்ற குற்றங்கள் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
விவசாயத்திற்கு அடுத்தபடியாக உள்ள நெசவு தொழிலுக்கு ஆதரவாக எந்த திட்டமும் தமிழக அரசிடம் இல்லை.
ஏற்கனவே நான் கூறியபடி, இந்த நிதிநிலை அறிக்கை 'அம்மாவில் ஆரம்பித்து, அம்மாவிலேயே முடிந்திருக்கிறது”. இந்த நிதிநிலை அறிக்கையை பொறுத்தவரை பூஜ்ஜியம் தான்.’’ என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.