நடிகர் ஜெயராம் வீடு தாக்குதல் நிகழ்த்தப்பட்ட வழக்கு தொடர்பாக சீமான் உட்பட 14 பேர் திருவள் ளூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-1 ல் நேற்று ஆஜராயினர்.
நடிகர் ஜெயராம் கடந்த 2010 ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழ்ப் பெண்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அந்த கருத்து தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் வகை யில் உள்ளதாக கூறி, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த பிரச்சினை காரணமாக, கடந்த 2010-ம் ஆண்டு, திருவள்ளூர் மாவட்டம், வளசரவாக்கம், ஜானகி நகரில் உள்ள நடிகர் ஜெயராமின் வீடு மீது தாக்குதல் நிகழ்ந்தது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 17 பேர் மீது வளசரவாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றம்-1ல் நடந்து வந்த நிலையில், தற்போது, திருவள்ளூரில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-1-க்கு மாற்றப்பட்டுள்ளது. நேற்று நீதிபதி வெற்றிச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் உட்பட 14 பேர் ஆஜராயினர். வழக்கின் விசாரணையை ஏப்ரல் 10-ம் தேதிக்கு நீதிபதி வெற்றிச்செல்வி ஒத்திவைத்தார்.