தமிழகத்தில் தெருக்கள், ஊர்களின் பெயரிலுள்ள ஜாதிப் பெயரை நீக்குவது தொடர்பாக 37 ஆண்டுகளுக்கு முன் பிறப் பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்தக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சி டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் பொன்.தம்மபாலா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் தெருக்கள் மற்றும் ஊர்களின் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்குவதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
அந்த தீர்மானத்தின்பேரில் மேற்கொள்ளப்படும் நடவடிக் கையை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு 3.10.1978-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. மேலும், அரசுத் துறை ஆவணங்களில் தாழ்த்தப்பட்டோர் வகுப்பில் உள்ள ஜாதிகளை குறிப்பிடும்போது, ஜாதி பெயர்களில் குறிப்பிடாமல் மொத்தமாக ஆதிதிராவிடர் வகுப்பினர் எனக் குறிப்பிட வேண்டும் என்று தமிழக ஆதி திராவிடர் நலத் துறை 24.2.2007-ல் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணைகள் அமல்படுத்தப் படவில்லை.
இந்த அரசாணைகளை முறை யாக அமல்படுத்தியிருந்தால் தமிழகத்தில் ஜாதி வேறுபாடற்ற நிலை ஏற்பட்டிருக்கும். வாக்கா ளர் பட்டியலிலும் தெருக்களின் பெயர்கள் ஜாதி பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. தெருக்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள் ஜாதி பெயரில் இருப்பதால், அப்பகுதிகளில் ஜாதி பாகுபாடு நிலவுகிறது. ஜாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக 37 ஆண்டுகளுக்கு முன் பிறப்பித்த அரசாணை இன்னமும் முறைப் படி அமலுக்கு வராதது வேதனை யானது. எனவே, அரசாணை அடிப்படையில் தமிழகத்தில் தெருக்கள் மற்றும் ஊர்களின் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. பதில் மனு தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர், ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மை செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர் விசாரணையை மார்ச் 23-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.