தமிழகம்

விவசாயிகளுக்கு ஆதரவாக 28-ம் தேதி கடையடைப்பு

செய்திப்பிரிவு

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக விவசாயிகள் மேற்கொள்ளவுள்ள ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவாக வணிகர்கள் ஒருநாள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: நாட்டின் மிகப் பெரிய சுயதொழில் விவசாயம். இந்த விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை தடுக்க கர்நாடக அரசு முயற்சிக்கிறது. கர்நாடக அரசின் இந்தச் செயல், நடைமுறைக்கு வந்தால் தமிழகத்தில் 70 சதவீத மக்கள் பாதிப்படைவர். மத்திய அரசைக் கண்டிக்க விவசாயிகளுக்கு கிடைத்த வாய்ப்பை, தமிழக வணிகர்களும் பயன்படுத்தி விவசாயிகளுக்கு ஆதரவு தரவேண்டும்.

வரும் 28-ம் தேதி தமிழக வணிகர்கள் கடையடைப்புச் செய்து தமிழகத்தின் உணர்வை வெளிப்படுத்துவார்கள். ஒருநாள் கடையடைப்பு நடத்துவதால் வணிகர்களுக்கு இழப்பு ஏற்படும் என்ற போதிலும், தமிழகத்தின் தன்மானத்தைக் காக்க வணிகர்கள் தயாராக இருக்கிறோம்.

வணிகர் பேரவை ஒவ்வொரு ஆண்டும் மே 5-ம் தேதி நடத்தும் வணிகர் தினவிழாவை, இந்த ஆண்டு உள்நாட்டு தொழில் வணிக பாதுகாப்பு மாநாடு என்ற பெயரில் தஞ்சையில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT