இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ராமேசுவரம்-தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் சமரவீராவுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ்கோடிக்கும், இலங்கையின் நுழைவு வாயிலான தலைமன்னாருக்கும் இடையே கப்பல் போக்குவரத்து 24.2.1914-ல் தொடங்கப்பட்டது.
சென்னையில் இருந்து பாம்பன் ரயில் பாலம் வழியாக தனுஷ்கோடி வரை ரயிலில் பயணித்து, பின்னர் தனுஷ்கோடியில் இருந்து கப்பல் மூலம் தலைமன்னார் சென்று அங்கிருந்து மீண்டும் ரயில் மூலம் கொழும்பு வரை ரயில்-கப்பல்-ரயில் என மாறிமாறிப் பயணிக்கும் போக்குவரத்து 22.12.1964-ல் தனுஷ்கோடியை புயல் தாக்கி அழிக்கும் வரை நீடித்தது.
புயலில் தனுஷ்கோடி அழிந்த பிறகு 1965-ம் ஆண்டு முதல் ராமேசு வரத்தில் இருந்து தலைமன்னா ருக்கு மீண்டும் கப்பல் போக்கு வரத்து தொடங்கப்பட்டது. ‘ராமா னுஜம்' என்று பெயரிடப்பட்ட இந்த பயணிகள் கப்பலில் அதிகபட்சம் 400 பேர் பயணம் செய்யலாம். ராமே சுவரத்தில் இருந்து வாரத்துக்கு 3 தினங்கள் தலைமன்னாருக் கும், அங்கிருந்து ராமேசுவரத்துக் கும் வந்த ராமானுஜம் கப்பல் ‘ஹவுஸ்புல்'லாகவே பயணித்தது.
1981-ம் ஆண்டு ஜுன் மாதம் வரை தடைபடாமல் நடைபெற்ற கப்பல் போக்குவரத்து இலங்கை யில் உள்நாட்டுப் போர் தொடங்கிய பிறகு பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டது.
தூத்துக்குடி-கொழும்பு சேவை
முப்பதாண்டுகள் கழித்து 13.6.2011-ல் தூத்துக்குடி-கொழும்பு இடையே ஸ்கொட்டியா பிரின்ஸ் என்னும் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. ஆனால், தமிழக-இலங்கை அரசியல் காரணங்களுக்காக 5 மாதங்களில் ஸ்கோட்டியா பிரின்ஸ் தனது சேவையை நிறுத்தியது. இந்தியா-இலங்கை இடையே மீண்டும் கப்பல் இயக்குவதால் ஏற்படும் அனுகூலங்கள் குறித்து கீழக்கரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அஹமது ரிஃபாய் மரைக்காயர் கூறியதாவது:
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தற்போது விமானம் மூலம் மட்டுமே செல்ல முடியும். சென்னை, திருச்சி, மதுரை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து இலங்கைக்கு விமானங்கள் இயக் கப்படுகின்றன. ஆனால், இரு நாட்டு சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள், இலங்கையில் இருந்து மருத்துவம், கல்விக்காக வருபவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகக் குறைந்த கட்டணத்தில் கப்பலில் சென்று வர முடியும்.
இலங்கையில் ரயில் பாதை புனரமைப்பில் இந்திய ரயில்வே யின் அங்கமான இர்கான் (IRCON) நிறுவனம் ஈடுபட்டது. சமீபத்தில் கொழும்பில் இருந்து யாழ்பாணத்துக்கு யாழ் தேவி ரயில் சேவையை தொடக்கி வைத்தது. அதைத் தொடர்ந்து தலைமன்னார் வரையி லான ரயில் பாதையை அமைத்து முடித்துள்ளது.
இத்தருணத்தில் ராமேசுவரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கினால் தமிழக தென்மாவட் டங்கள் பொருளாதார ரீதியாக நன்கு வளர்ச்சியடையும் என்றார்.