தனியார் தொலைக்காட்சி அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை கிண்டி அருகே ஈக்காட்டுதாங்கலில் புதிய தலைமுறை தொலைக்காட்சி தலைமை அலுவலகம் உள்ளது. மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி, பெண்களுக்கு தாலி அவசியமா? என்ற தலைப்பில் சிறப்பு விவாத நிகழ்ச்சியை நடத்தப்போவதாக இந்த தொலைக்காட்சி அறிவித்திருந்தது. இதற்கு இந்து முன்னணி உட்பட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் வந்தன. தொலைக்காட்சி அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அதை வீடியோ எடுத்த தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் செந்தில்குமரன் தாக்கப்பட்டார். அவரது வீடியோ கேமராவும் உடைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் கிண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் தொலைக்காட்சி நிறுவனம் தாக்கப்பட்ட வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளது. அதில், ‘தொலைக்காட்சி அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் நேரடியாக விசாரணை நடத்தி, அந்த அறிக்கையை 6 வாரங்களுக்குள் மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.