செட்டிநாடு குழுமம் வாழ்நாள் ஊதியமாக தங்களுக்கு ரூ.22 கோடி தரக்கோரி அதன் ஊழியர்கள் 27 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு வரும் 16-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
தொழிலதிபர் எம்ஏஎம் ராமசாமிக்கும் அவரால் சுவீகாரம் எடுக்கப்பட்ட ஐயப்பன் என்ற முத்தையாவுக்கும் இடையே வெளிப்படையாக மோதல் தொடங்கியதுமே, எம்ஏஎம்-க்கு ஆதரவான செட்டிநாடு குழும பணியாளர்கள் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். சிலருக்கு திடீரென ஊதியம் நிறுத்தப்பட்டது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட 27 பேர் தங்களுக்கு வாழ்நாள் ஊதியமாக ரூ.22 கோடி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு வரும் 16-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
வழக்கு தொடர்ந்துள்ள ஊழியர்கள் இதுபற்றி மேலும் கூறியதாவது:
நாங்கள் எம்ஏஎம் விசுவாசிகள் என்பதற்காக எந்தவித அறிவிப்புமின்றி கடந்த மே மாதம் எங்கள் சம்பளத்தை நிறுத்தினார்கள். நாங்கள் செட்டிநாடு சிமென்ட் நிறுவனத்தில் வேலை செய்தவர்கள். பப்ளிக் லிமிடெட் கம்பெனியில் இருந்தால் எதிர்த்து கேள்வி கேட்போம் என்பதால், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்கு எங்களை மாற்றிவிட்டு, சம்பளத்தையும் நிறுத்திவிட்டனர்.
இதையடுத்து, சம்பள நிலுவைத் தொகை ரூ.34 லட்சத்தை வழங்கக் கோரி 27 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் வழக்கு தொடுத்தோம். பின்னர், செட்டில்மென்ட்டுக்கு வருவதாக கம்பெனி தரப்பு கூறியது. அப்படியானால் இன்றைய ஊதிய விகிதப்படி மொத்தம் ரூ.22 கோடி வழங்கவேண்டும் என்றோம். அதற்கு, ‘செட்டில்மென்ட் தரமுடி யாது. வேலை கொடுக்கிறோம்’ என்றனர்.
எங்களுக்குப் பிறகு இன்னும் 6 பேருக்கு 3 மாதங்களாக சம்பளம் தராமல் நிறுத்தினர். அவர்களை மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூருக்கு பணிமாறு தல் செய்துள்ளனர். இப்படிச் செய்தால் அவர்களே வேலையை விட்டுப் போய்விடுவார்கள் என்பது நிர்வாகத்தின் எண்ணம்.
இதேபோல, எங்களுக்கும் மீண்டும் வேலை கொடுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு, எங்களையும் சோலாப்பூருக்கு மாற்றிவிடுவார்கள். மார்ச் 16-ல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது கம்பெனி இதற்கு விளக்கம் தரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.