மொழிவாரி மாநிலப் பிரிவினைக்கு முன்பு தமிழகத்துடன் இருந்த பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைக்கக் கோரி மார்ச் 23-ம் தேதி நெல்லையில் மாநாடு நடத்தப்படுகிறது.
1956-ல் மொழிவாரியாக மாநிலப் பிரிவினையின்போது தமிழகத்தின் இயற்கை வளமிக்க பகுதிகள் கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநில எல்லைகளுக்குள் சென்றுவிட்டன. இதனால் அந்தப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாக தமிழர் அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றன. தமிழக எல்லைகள் மீண்டும் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்ற கோஷத்துடன் நெல்லையில் அடுத்த மாதம், தமிழர் வாழ்வுரிமைக் கட்சியும் கேரளத் தமிழர் கூட்டமைப்பும் இணைந்து மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளன.
இதுகுறித்து ‘தி இந்து’வுக்கு பேட்டியளித்த கேரளத் தமிழர் கூட்டமைப்பின் அமைப்பாளர் அன்வர் பாலசிங்கம், ’’மொழிவாரி யாக மாநிலங்களைப் பிரித்தபோது கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டம், ஆந்திராவின் சித்தூர்மாவட்டம் கேரளத்தின் இடுக்கி, பாலக்காடு மாவட்டங்கள் தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்குள் சென்றுவிட்டன. இந்த மாவட்டங்களில் வசிக்கும் தமிழ் மக்கள் இப்போது நிம்மதியை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்.
மாண்டியா தமிழர்களில் பெரும் பகுதியினர் கன்னடர்களாகவே மாறிவிட்டார்கள். இடுக்கி மாவட்டத்தின் பூர்வீக குடிகளான முதுவான்களை கேட்டால் ’நாங்கள் மலையாளிகள்’ என்கிறார்கள். ஆக, பூர்வீக குடிகளான தமிழினம் அண்டை மாநில எல்லைக்குள் அடிப்படை உரிமைகளைக் கூட பெறமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. எனவே தான் எல்லைகள் மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம். என்றார்.