மத்திய அரசு நிறைவேற்றியுள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்தும், தமிழக வேளாண்மைப் பொறியியல் துறையின் மூத்தப் பொறியாளர் தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கோரியும் வரும் 29-ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், பன்னாட்டுத் தொழிலதிபர்களுக்கு உதவிடும் நோக்கத்தோடும் தேவையான திருத்தங்களை பா.ஜ.க. அரசு, கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் புகுத்தி, அவசரச் சட்டம் ஒன்றை 29-12-2014 அன்று பிரகடனப்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயச் சங்கங்கள் நிலம் தொடர்பான அடிப்படை உரிமையைப் பாதிப்பதால், அந்த அவசரச் சட்டத்தை தொடர்ந்து எதிர்த்த நிலையிலும், பா.ஜ.க. அரசு பிடிவாதமாக 10-3-2015 அன்று மக்களவையில் தங்களுக்குள்ள பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றியுள்ளது.
இது போலவே, தமிழகத்தில் வேளாண் துறைக்குப் பொறுப்பேற்றிருந்த அமைச்சர் ஒருவர் கொடுத்த நெருக்கடியின் காரணமாக தமிழக வேளாண்மைப் பொறியியல் துறையின் மூத்தப் பொறியாளர் முத்துக்குமாரசாமி மனஉளைச்சலினால் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார். இந்தச் செய்தி
ஊடகங்களில் வெளிவந்து அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க. அரசுக்கு எதிராகப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியவுடன் அவசர அவசரமாக அந்த அமைச்சரை, கட்சிப் பொறுப்பிலிருந்தும், அமைச்சரவையி லிருந்தும் விலக்கியிருக்கிறார்கள். இதிலிருந்தே அதிகாரியின் தற்கொலைக்குக் காரணம் அமைச்சர் தான் என்பதை அ.தி.மு.க. அரசே ஒப்புக் கொண்டு விட்டதாக நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.
மத்திய அரசு பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பையும் மீறி நிலம் கையகப் படுத்தும் சட்டத் திருத்தங்களை மக்களவையில் நிறைவேற்றிவிட்டு, மாநிலங்களவையிலும் நிறைவேற்றிட முயற்சிப்பதைக் கண்டித்தும்; அரசு அதிகாரி ஒருவரின் தற்கொலைக்குக் காரணமான அமைச்சர் மீது குற்ற நடவடிக்கைகள் எடுத்து, அவரை உடனடியாகக் கைது செய்வதோடு, வழக்கினை சி.பி.ஐ. மூலமாக விசாரிக்க ஒப்படைத்திட வேண்டுமென்பதை வலியுறுத்தியும்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 20-3-2015 அன்று வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணியளவில், அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்னால் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திடும் வகையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.