மீத்தேன் எரிவாயு திட்டத்தை செயல்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த அறிக்கையை தமிழக அரசிடம் விரைவில் தாக்கல் செய்ய நிபுணர் குழு முடிவெடுத்துள்ளது.
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 691 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான நிலக்கரி படுகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப் பரேஷன் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த 2010-ல் அனுமதி அளித்திருந்தது. விவசாயிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இதுபற்றி ஆய்வு நடத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் தலைமையில் 7 நிபுணர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்தது.
இக்குழு பல்வேறு ஆய்வுகளை நடத்தியதுடன் இதுதொடர்பான பல்வேறு கேள்விகளையும் எழுப்பி யுள்ளது. இதற்கு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சரியான பதில் அளிக்க வில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த நிபுணர் குழு, இடைக்கால அறிக்கை ஒன்றை தமிழக அரசிடம் வழங்கியது.
இந்நிலையில் மீத்தேன் எடுக்கும் திட்டம் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற் படுத்துமா என்பது குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக விவாதிக்க நிபுணர் குழுவின் 3-வது மற்றும் இறுதி கூட் டம் நேற்று கூட்டப்பட்டது. இக்கூட் டத்துக்கு நிபுணர் குழுவின் தலை வரும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான கே.ஸ்கந்தன் தலைமை வகித்தார்.
மீத்தேன் எடுக்கும் திட்டத்தால் விவசாயத்துக்கும், சுற்றுச்சூழ லுக்கும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து அரசுக்கு விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய கூட்டத் தில் முடிவெடுக்கப்பட்டதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்திட்டத்துக்கு மத்திய சுற்றுச் சூழல் துறை அனுமதி வழங்கி யிருந்தாலும், இதற்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி அவசியம். ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான அனுமதியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.