தூத்துக்குடி மாவட்டம் திருவை குண்டம் அருகே கொலை செய்யப் பட்ட அதிமுக கிளை செயலாளரின் இறுதிச் சடங்கு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடை பெற்றது. தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருவைகுண்டம் அருகேயுள்ள கொங்கராயக்குறிச்சி புதுமனை தெற்கு தெருவை சேர்ந்தவர் வீ.பிச்சையா (57). அதிமுக கிளைச் செயலாளரான இவர், பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை கொங்கராயக்குறிச்சி இந்திராநகர் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பிச்சையாவின் உறவினர்கள் மற்றும் அவரது சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எதிர்தரப்பினர் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். அங்கிருந்த காமராஜர் சிலை, 60 வீடுகள், 4 கடைகள், 7 நான்கு சக்கர வாகனங்கள், 10 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை அந்த கும்பல் அடித்து நொறுக்கி சூறையாடியது.
உண்மையான கொலையாளி களை கைது செய்யக் கோரி பிச்சையாவின் சடலத்தை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.
போலீஸார் நடத்திய பேச்சு வார்த்தையில் உறவினர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இருந்த பிச்சையாவின் உடலை நேற்று மதியம் 1.30 மணியளவில் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிற்பகல் 2 மணி யளவில் அமைதியான முறையில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. கொலையைத் தொடர்ந்து திருவைகுண்டம் பகுதியில் நேற்று இரண்டாவது நாளாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திருவைகுண்டம் - வல்லநாடு வழித் தடத்தில் பஸ்கள் இயங்கவில்லை.
கொங்கராயக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. திருவை குண்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் பெற்றோர் பாதுகாப்புடன் வந்து சென்றனர். தொடர்ந்து திருவைகுண்டம் பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர்.
கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அருளப்பன் மகன் அந்தோணி என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொங்கராயக்குறிச்சியை சேர்ந்த நடேசன் மகன் அருள், தங்கராஜ் மகன் ராபின்சன், ராமசுப்பு மகன் ரவி, நல்லதம்பி மகன் பட்டுராஜ் ஆகிய 4 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
67 பேர் மீது வழக்கு
இதேபோல் காமராஜர் சிலை, வீடுகள், வாகனங்களை அடித்து நொறுக்கியது, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவியை தாக்கியது தொடர்பாக 67 பேர் மீது தனித்தனியாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வன்முறையில் ஏற்பட்ட சேதம் குறித்து வருவாய் துறையினர் கணக்கெடுத்துள்ளனர். மொத்தம் ரூ. 10 லட்சம் அளவுக்கு சேதமடைந்திருப்பதாக வருவாய் துறை சார்பில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.