தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார நிறைவு பொதுக்கூட்டம், நங்கநல்லூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மதிமுக வேட்பாளர் மாசிலாமணி, ஆலந்தூர் சட்டசபைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் ஏ.எம்.காமராஜ் ஆகியோரை ஆதரித்து விஜயகாந்த் பேசியதாவது:
இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். பணத்துக்கு ஆசைப்பட்டு ஓட்டு போட வேண்டாம். மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் 2 ஆண்டுகளில் குடிநீர், மின்சாரம் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் குரல் கொடுப்போம். கூட்டணி கட்சிகளுக்குள் எந்த சண்டையும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்.
மோடியை விட, இந்த லேடிதான் சிறந்தவர் என ஜெயலலிதா சொல்கிறார். அதிமுக தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் தடையின்றி மின்சாரம், தண்ணீர் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது, இதுவரை எதுவும் வரவில்லை. இதுதான் லேடியின் சிறந்த நிர்வாகமா?
கடந்த 15 ஆண்டுகளாக சொத்துக் குவிப்பு வழக்கில் வாய்தாமேல் வாய்தா வாங்கி வருகிறார். மோடி அதுபோல எதுவும் செய்யவில்லையே. தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிகிறது. நாளை மறுநாள் தேர்தல். இடையில் ஒரு நாள் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள அந்த ஒரு நாளில் நன்றாக சிந்தித்து, யோசித்து வாக்களியுங்கள்.
அம்மா உணவகம், அம்மா தண்ணீர் பாட்டில், அம்மா பார்மசி என அரசு வியாபாரம் செய்கிறது. சிறு வியாபாரிகள் செய்ய வேண்டியதை அரசு செய்து கொண்டிருக்கிறது. விலைவாசி எல்லாம் ஏறிவிட்டது. அதுவும் ஒரே நாளில் காய்கறிகளின் விலை ரூ.10 உயர்ந்துவிட்டது.
அதிமுக, திமுகவுக்கு ஊழல் செய்வதுதான் முக்கியம். எனக்கு 90 வயது ஆகிறது. இடுப்பு ஒடிஞ்சி போச்சு. ஆனாலும் பிரச்சாரத்துக்கு வருகிறேன் என கருணாநிதி சொல்கிறார். இவரை யார் கூப்பிட்டது. வீட்டிலேயே உட்கார வேண்டியதுதானே. உங்களுடைய குடும்பத்துக்காக நீங்கள் வருகிறீர்கள். அதேபோல, தோழியின் குடும்பத்துக்காக அந்த அம்மா வருகிறார். ரூ.100 மின்சாரக் கட்டணம் போய், தற்போது ரூ.300 மின்சார கட்டணமாக கட்டி வருகிறீர்கள். மக்கள் வறுமை யாலும் வறட்சியாலும் பாதிக்கப்பட் டுள்ளனர். நமக்கு தேவை மோடியா, லேடியா என்பதை மக்களே சிந்தித்து வாக்களியுங்கள். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.