தமிழகம்

பெரியார், அண்ணா அழிக்க நினைத்த கட்சி காங்கிரஸ்: சீமான் பேச்சு

செய்திப்பிரிவு

பெரியார், காமராஜர், அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் அழிக்க முனைந்த கட்சி காங்கிரஸ் என நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் காமராஜை ஆதரித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் கள்ளக்குறிச்சியில் வியாழக் கிழமை மாலை பேசியதாவது:

சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்று நச்சாக மாறட்டும் என்ற அம்பேத்கர் தொடங்கி சுயமரியாதை, முற்போக்கு சிந்தனைகளை விதைத்த பெரியார் , சுபாஷ் சந்திர போஸ், பசும்பொன் முத்துராமலிங் கத் தேவர், அண்ணா ஆகிய தலைவர்கள் காங்கிரஸை ஒழிக்க முயற்சித்தனர்.

தற்போது காங்கிரஸை ஒழிக்க நமக்கு வாய்ப்பு கிடைத் துள்ளது. 50 ஆண்டுகளுக்கு மேலான காங்கிரஸ் ஆட்சியில் மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சினைகளும் தீர்க்கப்படவே இல்லை. காங்கிரஸ் ஆண்ட மாநி லங்களில் கூட மகத்தான வெற்றி பெறாத நிலையில், இந்திராவின் மருமகள் எங்கள் வீட்டு மருமகள் என எண்ணி வாக்குகளை அளித்து 40 தொகுதிகளில் வெற்றி பெற வைத்தோம். ஆனால் அதற்குக் கைமாறாக நம் இனமக்களான இலங்கை தமிழர்களைக் கொன்று குவித்தார்கள்.

இதைத் தட்டி கேட்க வலிமை இருந்தும் வாய்மூடி வேடிக்கை பார்த்தது பாஜக. தமிழனை சுட்டுகொன்ற இலங்கை நட்பு நாடு என்று கூறும் காங்கிரஸையும் அதற்கு துணைபோன பாஜகவையும் விடுத்து அதிமுகவிற்கு வாய்ப்பளியுங்கள் என்று சீமான் பேசினார்.

சீமான் பேசிய மேடையில் அதிமுகவினர் யாரும் மேடை ஏறவில்லை. ஏன் என அதிமுக நிர்வாகி ஒருவரைக் கேட்ட போது, நாங்கள் தேர்தல் விதிமுறையை மீறிகூட பேசுவோம். அதனால் எங்கள் மீது வழக்கு பதியப்படலாம். அதனால் நீங்கள் மேடை ஏறவேண்டாம் என நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூறியதால் யாரும் மேடை ஏறவில்லை என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT