இந்திய அஞ்சல் துறை சார்பில் “செல்வமகள் சேமிப்பு கணக்கு” திட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் அறிமுகம் செய்தது. பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள், இத்திட்டத்தில் இணையலாம். பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமாக கணக்கு தொடங்கலாம். விண்ணப்பத்துடன் குழந்தையின் பிறந்த தேதி சான்று, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடையாள சான்று, அவர்களது புகைப்படத்தை இணைத்து ஒப்படைக்க வேண்டும்.
ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 மற்றும் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை சேமிக்கலாம். சேமிப்பு தொகையை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாதமும் செலுத்தும் வசதி உள்ளது. தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு சேமிக்கலாம். முதிர்வு தேதி 18-வது ஆண்டில் தொடங்குகிறது. கல்வி மற்றும் திருமணத் தேவைக்கு, கட்டிய தொகையில் இருந்து 50 சதவீதத்தை வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம். மேலும், 21-வது ஆண்டில் முழு தொகையையும் பெறலாம். இதற்கு வருமான வரி சலுகை உள்ளது. மாதம் ரூ.500 செலுத்துகிறோம் என்றால், 14 ஆண்டுகளுக்கு ரூ.84 ஆயிரம் செலுத்தி, 21-வது ஆண்டில் ரூ.3,03,564 பெற வாய்ப்பு உள்ளது என்று அஞ்சல் துறை தெரிவிக்கிறது.
இந்த திட்டம் குறித்து கிராம மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் இன்றளவும், தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதில் ஆர்வமாக உள்ளனர். முதலீட்டுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்ற முகவர்களின் சொற்களை நம்பி ஏமாற்றமடைகின்றனர். எனவே, ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு’ திட்டம் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
2,600 பேர் இணைந்துள்ளனர் இதுகுறித்து அஞ்சல் துறை கண்காணிப்பாளர் கனகசபா கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டத்தில் 2,600 பேர் இணைந்துள்ளனர். ஊராட்சி மன்ற அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கிராமிய அஞ்சலகங்களுக்கு வரும் மக்களிடமும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விவரிக்கிறோம்.
பள்ளிகளுக்கும் நேரில் சென்று, திட்டம் குறித்து அஞ்சலக ஊழியர்கள் எடுத் துரைத்து வருகின்றனர். போளூர் மற்றும் கலசபாக்கம் வட்டங்களில் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து, அனைத்து வட்டங்களிலும் ஆட்டோ மூலம் பிரச்சாரம் விரிவுப்படுத்தப்படும்” என்றார்.