ராணிப்பேட்டை சிப்காட் வளாகத் தில் கடந்த ஜனவரி 31-ம் தேதி சிட்கோ தோல் கழிவு பொது சுத்திகரிப்பு நிலைய கழிவுநீர்த் தொட்டி உடைந்து 10 பேர் இறந்தனர். இந்த விபத்து தொடர்பாக வேலூர் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்து தொடர்பாக அதன் நிர்வாகக் குழு இயக்குநர் அமிர்தகடேசன், நிர்வாகக் குழு இயக்குநர்கள் ஜெயசந்திரன், சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், சிட்கோ தோல் கழிவு பொது சுத்திகரிப்பு நிலையத்தின் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் 6 பேர் தலைமறைவாக இருந்தனர். இவர்கள், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தொடர்ந்து தலைமறைவாக இருந்த இவர்களை சிபிசிஐடி போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் ரமேஷ் (43), புகழேந்தி (46), சீனிவாச ரெட்டி (48), சரவண கார்த்திக் (35), ராஜேந்திரன் (48), சேவா சீனிவாசராவ் (53) ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.