ரேஷன் கடைகளில் கடந்த 3 மாதங்களாக உளுத்தம்பருப்பு விற்பனை செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாநில உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பாக ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் உளுந்தின் ஒதுக்கீடு குறைந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஒரு கோடியே 98 லட்சம் பேர் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். அவர்களுக்காக 33,973 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. வெள்ளை நிற ரேஷன் அட்டை வைத்துள்ள 10 லட்சத்து 57 ஆயிரத்து 26 பேர், சர்க்கரை மட்டும் வாங்குகின்றனர். மற்றவர்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.
வெளிச்சந்தையில் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விலை அதிகமாக இருப்பதால் இவற்றை பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் நுகர்வோருக்கு குறைந்த விலையில் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த 3 மாதங்களாக ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த சிந்தாமணி என்பவர் கூறும்போது, ‘‘ரேஷன் கடைகளில் பொதுவாக எல்லா பொருட்களும் கிடைப்பதில்லை. அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் மட்டும்தான் பெரும்பாலும் கிடைக்கிறது. அதுவும் மாதத்தின் முதல் வாரத்தில் சென்றால்தான் கிடைக்கிறது.
கடந்த 3 மாதங்களாக உளுந்து வழங்காததால் மளிகைக் கடைகளில் அதிக விலை கொடுத்த வாங்க வேண்டி உள்ளது’’ என்றார்.
இது தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி கூறும்போது, ‘‘நுகர்வோ ருக்கு தேவையான அளவு உணவுப் பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை.
சிறப்பு பொதுவிநியோக திட்டத்தின்கீழ் வழங்கப்படும் துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றின் ஒதுக்கீடு கடந்த 3 ஆண்டுகளில் குறைந்துள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் 60 சதவீத அட்டைகளுக்கு மட்டும்தான் பொருட்கள் வழங்க முடிகிறது’’ என்றார்.
மாநில உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரி யிடம் கேட்டபோது, “தமிழகத்தில் தேவையுள்ள இடங்களில் உளுத்தம் பருப்பு வழங்கப்படு கிறது. இந்த மாதம் மட்டும்தான் சில பிரச்சினைகளால் உளுந்து விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பருப்பு மற்றும் பாமாயில் ஒவ்வொரு வருடத்தின் தேவையை பொருத்துதான் வாங்கப்படுகிறது’’ என்றார்.