தமிழக அரசு பரிந்துரைத்தால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் தேசிய நெடுஞ் சாலையாக மேம்படுத்தப்படும் என்று மத்திய கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகம் மற்றும் கேரளத்தில் நடந்துவரும் தேசிய நெடுஞ் சாலைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னையில் நேற்று நடை பெற்றது. இதில் அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் பேசியதாவது:
தமிழகத்தில் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயிரம் கி.மீ. சாலைப்பணிகள் நடந்து வருகின்றன. அந்தப் பணிகளை விரைவாக முடிக்க மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சென்னை மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலைப் பணிகள் நீதிமன்ற வழக்கால் தாமதமாகியுள்ளது. இதில் உள்ள பிரச்சினைகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் தமிழக அரசும் பேசித் தீர்க்க வேண்டும்.
மாநில அரசு பரிந்துரை செய்தால், சென்னை முதல் கன்னியாகுமரி வரையான 738 கி.மீ. கிழக்கு கடற்கரை சாலை, தேசிய நெடுஞ்சாலையாக மேம் படுத்தப்படும்.
கிழக்கு கடற்கரை சாலையில் 153 கி.மீ. தொலைவு மட்டுமே தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. மதுரை - ராமநாதபுரம் இடையே 115 கி.மீ. சாலையை தேசிய நெடுஞ்சாலையாக்க வேண்டும் என்ற பரிந்துரை ஆய்வில் உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா விரைவில் நடக்கும்.
தமிழகம் மற்றும் கேரளாவில் 430 கி.மீ. தொலைவு தேசிய நெடுஞ்சாலைகளை அகலப் படுத்துவதற்காக கடந்த 6 மாதங் களில் ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக் கப்பட்டுள்ளது. இதில் 290 கி.மீ. அளவுக்கு பணிகள் முடிந்துள்ளன. நாடு முழுவதும் 62 சுங்க வசூல் மையங்களை மூடுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய உறுப்பினர் எம்.பி.ஷர்மா, தலைமைப் பொது மேலாளர் சின்னா ரெட்டி, மண்டல அலுவலர் டி.எஸ்.அரவிந்த், மற்றும் தமிழகம், கேரளத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.