காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு, ‘‘கட்சிக்காக அதிகம் உழைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது’’ என்று கூறினார்.
தமிழகத்தில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு, சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். திமுகவின் தலைமைக் கழக பேச்சாளராக இருந்த குஷ்பு, திமுகவில் தனது உழைப்பு ஒருவழிப்பாதையாக உள்ளதாக கூறி அக்கட்சியில் இருந்து விலகினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸில் குஷ்புவுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என கூறப்பட்டுவந்த நிலையில், அகில இந்திய செய்தித் தொடர்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்ட 17 பேர் கொண்ட தேசிய செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் குஷ்புவும் இடம்பிடித்துள்ளார்.
இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் குஷ்பு கூறியதாவது:
எனக்கு அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வளவு பெரிய பொறுப்பை வழங்கிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், இதற்கு காரணமாக இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச் சிக்காக அதிகம் உழைக்க வேண்டிய நேரமும், பொறுப்பும் தற்போது வந்துள்ளது. அந்த பணியை சிறப்பாக செய்வேன். இவ்வாறு குஷ்பு கூறினார்.