தமிழகம்

ஏரியில் சவுடு மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்களுக்கு கொலை மிரட்டல்: ஆட்சியரிடம் புகார் மனு அளிப்பு

செய்திப்பிரிவு

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக் குட்பட்ட கொண்டமங்கலம் ஏரியில் சவுடு மண் எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால், கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக ஆட்சியர் சண்முகத்திடம், கிராம மக்கள் நேற்று நேரில் மனு அளித்தனர்.

பின்னர், இதுகுறித்து கொண்ட மங்கலம் கிராம மக்கள் கூறிய தாவது: கொண்டமங்கலம் ஊராட்சி யில் 50 ஏக்கரில் அமைந்துள்ள ஏரியில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ஒப்பந்ததாரர் தரப்பில் மண் அள்ளப்படுகிறது. இதனால், ஏரியில் 30 அடி வரை ஆழம் ஏற்பட்டுள்ளது. அதிக ஆழம் காரணமாக, மழைக் காலத்தில் ஏரியில் தேங்கும் சிறிதளவு தண்ணீரைக் கூட பாசனத்துக்குப் பயன்படுத்த முடியவில்லை. மேலும், கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. எனவே, ஏரியில் சவுடு மண் எடுக்க எதிர்ப்புத் தெரிவித்தோம்.

இதையடுத்து, எதிர்ப்புத் தெரிவிக்கும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களை சரிகட்டும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு உடன்படாத நபர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஆட்சியர் தலையிட்டு, ஏரியில் சவுடு மண் எடுப்பதைத் தடுக்க வேண்டும் என்றனர் அவர்கள். இதுகுறித்து செங்கல்பட்டு வட்டாட்சியர் பஷிரா கூறியதாவது:

கொண்டமங்கலம் ஏரியில் சவுடு மண் எடுப்பதால் எந்த பாதிப்பும் இல்லை. ஏரியைத் தூர்வாருவதாக கிராம மக்கள் கருத வேண்டும். அதேவேளையில், அனுமதிக் கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண் அள்ளுவதை ஏற்க முடியாது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வருவாய்த் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பஷிரா.

SCROLL FOR NEXT