பறவைகளுக்கான சரணாலயங்கள் பல இடங்களில் இருந்தாலும் புதுச்சேரியில் வீடு ஒன்று சிட்டுக்குருவிகளுக்கான சரணா லயமாகத் திகழ்கிறது.
அழிந்து வரும் சிட்டுக் குருவிகளைப் பாதுகாக்கும் வகையில் தங்களது வீட்டின் ஒருபகுதியைச் சரணாலயமாக மாற்றியுள்ளனர் சந்திரசேகரன் - கீதா தம்பதி.
அதிகமான செல்போன் புழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாகச் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அருகி வருகிறது. அவைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மார்ச் 20-ம் தேதி உலகச் சிட்டுக் குருவிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. பலர் அழகிய வண்ணப்பறவைகளை விலைக்கு வாங்கிப் பெருமைக்கு வளர்க்கின்றனர். ஆனால் சந்திரசேகரன் குடும்பத்தினரோ அழிவின் விளிம்பில் உள்ள சிட்டுக் குருவிகளைத் தங்களின் உறவாகக் கருதிப் பாதுகாத்து வளர்க்கின்றனர்.
அவர்களது வீட்டுக்கு வரும் ஏராளமான சிட்டுக்குருவிகளைத் தங்குவதற்குப் பிரத்யேகமான இடத்தை உருவாக்க முடிவு செய்தனர். இதன்படி வீட்டின் ஒரு பகுதி சிட்டுக்குருவிகளின் சரணாலயமாக மாறியது. இதனால் சந்திரசேகரன் வீடு சிட்டுக்குருவிகளின் வசிப்பிடமாக மாறி ஏராளமான குருவிகள் வந்து செல்கின்றன.
இதுகுறித்து சந்திரசேகரன் - கீதா தம்பதி கூறும்போது, “சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவது குறித்துப் பத்திரிகை செய்திகளில் படித்தோம். எனவே, நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது. இதனால் அவைகளுக்காகப் பால்கனியில் சிறுதானியங்களைப் போட்டு வைத்தோம். அதன்பிறகு, வீட்டுக்கு வரும் குருவிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. எங்களுடைய மகள்கள் வைஷாலி, நித்யா ஆகியோரும் எங்களுடன் இணைந்து சிட்டுக் குருவிகளை நேசிக்கத் தொடங்கினர்.
குருவிகளுக்கு நொய், அரிசி, ராகி, கம்பு போன்றவற்றை உணவாக அளித்தோம். ஆனால், சிறிய வகை கம்பு தானியம் மீது குருவிகள் ஆர்வம் காட்டியதால் அவற்றை உணவாகத் தருகிறோம். நாங்கள் ஊரில் இல்லாதபோது அருகில் உள்ளவர்களிடம் கூறிவிட்டுச் செல்வோம். அவர்களும் எங்களுக்கு உதவுகிறார்கள்.
மேலும், எங்கள் தெருவில் சிறுவர்கள் பட்டாசு வெடிப்பதும் இல்லை. காலை 5.30 மணிக்கு வந்து மாலை 6 மணி வரை இருக்கின்றன. சில குருவிகள் இங்கேயே தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றுக்காகச் சிறு பானைகளை வீட்டில் கட்டி வைத்துள்ளோம்.
வீட்டின் ஒரு பகுதியைச் சிட்டு குருவிகளுக்காக ஒதுக்கி விட்டோம். அவற்றுக்காக ஒரு தண்ணீர் தொட்டியும் அமைத்துள்ளோம். சிட்டுக் குருவிகள் எங்கள் குழந்தைகள் போல மாறிவிட்டன. இதுவரை எங்கள் வீட்டில் 50 குஞ்சுகள் பிறந்துள்ளன. கடந்த மாதம் மட்டும் 10 குஞ்சுகள் பிறந்தன. சிட்டுக்குருவிகள் வந்து செல்வதால் மனம் மகிழ்ச்சி அடைகிறது. மற்றவர்களுக்கும் குருவிகளை வளர்க்க ஆலோசனை வழங்கி வருகிறோம்” என்று தெரிவித்தனர்.