தமிழகம்

ரசாயன தொழிற்சாலை தொழில்நுட்ப ஆய்வுக்கு அதிக நிதி: வல்லுநர்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

பாதுகாப்பான பணிச்சூழல் அமைய ரசாயன தொழிற்சாலைகள் தொழில்நுட்ப ஆய்வுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள், வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

‘ரசாயன தொழில்துறையில் பாதுகாப்பான உடல் நலம் மற்றும் சூழல்’ என்ற தலைப்பில் அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதிப்படுத்தும் சிறந்த வழிமுறைகள், சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு, இணையதள மேற்பார்வை, சட்ட நெறிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த கருத்தரங்கில் தொடக்கவுரையாற்றிய மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் எஸ்.கே.நாயக் கூறியதாவது:

ரசாயன தொழிற்சாலைகளிலிருந்து ஆண்டுக்கு 6.2 மில்லியன் டன் கழிவுகள் வெளியேறுகின்றன. ஆனால் 2.3 மில்லியன் டன் கழிவுகளை சுத்திகரிக்க தேவையான வசதிகளே உள்ளன. ரசாயன தொழில்களின் நீடித்த வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம். கழிவுகளை நீக்குவதில், பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதில் பல தொழில்நுட்பங்கள் சர்வதேச அளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், ரசாயன துறையின் மொத்த லாபத்தில் ஒரு சதவீதம் மட்டுமே தொழில்நுட்ப ஆய்வுகளாக ஒதுக்கப்படுகிறது என்பது கவலைக்குரிய விஷயம். மத்திய அரசின் உதவியுடன் இது 3 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் ராம்குமார் ஷங்கர் பேசும் போது, “பாதுகாப்பு என்பது ஒரு பழக்கமாக மாற வேண்டும். பாதுகாப்பற்ற சூழலை ஏற்க தொழிற்சாலைகள் மறுக்க வேண்டும். இந்த மாற்றம் உயர் பொறுப்புகளில் இருப்பவர் களிடமிருந்து தொடங்க வேண்டும்” என்றார்.

இந்த கருத்தரங்கை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பான ‘பிக்கி’ மற்றும் மத்திய ரசாயனத் துறை இணைந்து நடத்தின. இந்த கருத்தரங்கில் ‘பிக்கி’ அமைப்பின் ரசா யனப் பிரிவு தலைவர் பிரப்ஷ்ரன் சிங், அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் என்.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT