மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்படும் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்):
மீத்தேன் திட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம் உரிய ஆவணங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை. மீத்தேன் எடுக்கும் பணியையும் தொடங்கவில்லை. அதனால், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
மீத்தேன் எரிவாயு எடுக்கப்பட்டால், காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகும் என்ற பேராபத்தை மத்திய அரசு உணர்ந்து, அத்திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும். அவ்வாறு உறுதி அளிக்கும்வரை போராட்டம் தொடரும்.
ஜி.கே.வாசன் (தமாகா):
மீத்தேன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை தமாகா நடத்தியது. விவசாயிகளின் கோரிக்கை, அரசியல் கட்சிகளின் ஒன்றுபட்ட எதிர்ப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு இத்திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பை மத்திய அரசு உறுதியோடு நிறைவேற்ற வேண்டும்.
திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்):
மீத்தேன் திட்ட விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கம், அதன்நிலையில் தெளி வற்ற தன்மையை காட்டுகிறது. டெல்டா மாவட்டங்களில் 667 சதுர கி.மீ. பகுதியை ‘நிலக்கரி படுகை மீத்தேன் எரிவாயு பகுதி’ என்று அறிவிப்பு செய்திருப்பதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இத்திட்டத்தை தமிழகத்தின் எந்த பகுதியிலும் இனி செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.