நொளம்பூர் குப்பை மாற்றுமிட விவகாரம் தொடர்பான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வின் முன் மாநகராட்சி சுகாதாரத்துறை துணை ஆணையர் டி.ஆனந்த் நேற்று நேரில் ஆஜரானார். அப்போது 8 வாரங்களுக்குள் மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என அவருக்கு உத்தரவிடப்பட்டது.
நொளம்பூரில் கூவம் ஆற்றங்கரை யோரத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குப்பை மாற்றுமிடத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.
இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத் துறை உறுப்பினர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னி லையில் நேற்று விசாரணைக்கு வந் தது.
அப்போது, மாநகராட்சி சுகாதாரத் துறை துணை ஆணையர் டி.ஆனந்த் நேரில் ஆஜரானார். அவர் கூறும் போது, “பல்வேறு இடங்களில் சேகரிக் கப்பட்ட குப்பைகள், நொளம்பூரில் உள்ள குப்பை மாற்று மையத்துக்கு கொண்டுவரப்பட்டு, வேறு லாரி களுக்கு மாற்றி பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. குப்பை மாற்றும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற அவகாசம் வேண்டும்” என்றார்.
இதைத் தொடர்ந்து அமர்வின் உறுப்பினர்கள் “8 வாரங்களுக்குள் மாற்று இடத்தை தேர்வு செய்து மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்க வேண்டும். அதுவரை நொளம்பூர் குப்பை மாற்றும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் வாசுகி கண்காணிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.