தமிழகம்

கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழகத்துக்கு ரூ.2,385 கோடி நிதி ஒதுக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் அரசு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்காக ரூ.2,385 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய மின்துறை அமைச்சரிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய மின் துறை, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் பியூஷ் கோயல், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகளவு பயன் படுத்துவதற்கு தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.

கூடங்குளம் அணுமின் நிலை யத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தியை மேற்கொள் வதற்காக நிறுவப்பட்டுள்ள 2-வது மின்உற்பத்தி நிலையத்தை விரை வில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அங்கு உற்பத்தி செய் யப்படும் மின்சாரத்தில் 15 சதவீதத்தை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், வல்லூர் அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய் யப்படும் 225 மெகாவாட் மின்சாரத் தில் 15 சதவீதத்தை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். தீனதயாள் உபாத்யாயா கிராம ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ், தமிழகத் தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.2,385 கோடி நிதி ஒதுக்க வேண் டும். செய்யூர் மின் திட்டத்துக்கான டெண்டர் நடைமுறைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழக அரசின் கோரிக்கைகள் மீது விரைவில் தீர்வு காண்பதாக அமைச்சர் பியூஷ் கோயல் உறுதியளித்தார். இந்த சந்திப் பின்போது, மாநில மின்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வ நாதன், தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT