காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறும், மீத்தேன் திட்டத்தை முழுமையாக கைவிடுமாறும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் வரும் 28-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28 ஆம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த சென்னையில் உழவர் அமைப்புகள் நடத்திய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேகதாட்டு அணை கட்டும் திட்டத்தை தடுப்பதற்காக அனைத்து வழிகளிலும் போராடி விட்டு, கடைசி ஆயுதமாகவே இந்தப் போராட்டத்தை உழவர்கள் கையில் எடுத்துள்ளனர். கூட்டத்தில் பங்கேற்ற பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இப்போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழகத்தை ஆளும் கட்சியும் இக்கூட்டத்தில் பங்கேற்று ஆதரவளித்திருக்க வேண்டும். ஆனால், கூட்டத்தில் பங்கேற்காததன் மூலம் தங்களின் நிலைப்பாடு என்ன? என்பதையும் அக்கட்சி உணர்த்திவிட்டது.
முழு அடைப்புப் போராட்டம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றால்தான் காவிரி பிரச்சினையில் தமிழக மக்கள் அனைவரும் ஒன்றாக கைகோர்த்திருக்கிறார்கள் என்பதை மத்திய அரசுக்கு உணர்த்த முடியும். எனவே, இந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்" என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.