தமிழகம்

கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயத் திருவிழா நிறைவு: இந்திய-இலங்கை தமிழர்கள் உறவினர்களுடன் சந்திப்பு

செய்திப்பிரிவு

கச்சத்தீவில் நடைபெற்ற புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் இந்திய-இலங்கை தமிழர்கள் தங்களது உறவினர்களை சந்தித்து மகிழ்ந்தனர்.

ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் பாக் ஜலசந்தி கடற்பரப்பில் இயற்கை எழில் கொஞ்சும் கச்சத்தீவு அமைந்துள்ளது. மீனவர்களின் காவல் தெய்வமாக விளங்கும் புனித அந்தோணியார் ஆலயத்தை ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிப் பிள்ளை பட்டங்கட்டி, தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோர் 1913-ம் ஆண்டு சிறிய ஓலைக்குடிசையில் நிறுவினர். அதையடுத்து ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்ததோணியார் ஆலயத் திருவிழா பிப்ரவரி 28, மார்ச் 1 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றன. இதில் இந்திய பக்தர்கள் 4,003 பேர் கலந்து கொண்டனர். இலங்கையில் இருந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணம் மறை மாவட்டப் பேராயர் தாமஸ் சவுந்திரநாயகம் அந்தோணியார் சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் கச்சத்தீவு ஆலயத்தில் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிறப்புத் திருப்பலி பூஜை, அந்தோணியார் தேர் பவனி ஆகியவை நடைபெற்றது. பின்னர் காலை 9 மணி அளவில் கொடியிறக்கத்துடன் கச்சத் தீவு திருவிழா முடிவடைந்தது. இத்திருவிழாவில் தமிழகத்தில் உள்ள பக்தர்கள் இலங்கையில் உள்ள தங்கள் உறவினர்களை சந்தித்து மகிழ்ந்தனர்.

          
SCROLL FOR NEXT