தமிழகம்

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக மக்கள் பிரார்த்தனை செய்வது ஏன்?- ஓபிஎஸ் பேச்சு

செய்திப்பிரிவு

சமூகப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் காரணத்தால்தான், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக அனைத்து தரப்பு மக்களும் பிரார்த்தனை செய்வதாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மேலும், தமிழக அரசின் வருவாயில் 50சதவீதம் சமூக பாதுகாப்புக்கு செலவழிக்கப்படுவதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (திங்கள்கிழமை) தேனியில் அதிமுக மாவட்ட கழகம் சார்பில் 104 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது. இந்த திருமண விழாவினை தலைமை ஏற்று நடத்தி வைத்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

''இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என மூன்று மதத்தினர் மணமக்களாக உள்ளனர். மணமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும் விட்டு கொடுத்தும் வாழவேண்டும். அப்போதும் இல்லறம் இனிமையாக இருக்கும்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 24 ஆண்டுகள் ஆளும் கட்சியாக அதிமுக உள்ளது. மற்ற எந்த கட்சியும் இல்லை, அதிமுகவை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது.

பதிமூன்றரை ஆண்டுகள் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்து மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டான முதல்வராக இருந்துள்ளார்.

நெறி தவறாமல் வாழ்பவர் தெய்வத்துக்கு ஒப்பானவர் என திருவள்ளுவர் கூறியுள்ளார். நாம் வாழ்கிற இல்வாழ்க்கை பிறர் பழி சொல்லாமல் போற்றும்படியாக இருக்க வேண்டும்.

தமிழக அரசின் வருவாயில் 50 சதவீதம் சமூக பாதுகாப்புக்காக ரூ.48 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக கல்வித்துறையில் மாணவ, மாணவியரின் நலனில் அக்கறை செலுத்தி அவர்களுக்கு சைக்கிள், லேப்டாப், சீருடை, காலணி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மிக்கி, கிரைண்டர், மின்விசிறி என விலையில்லா பொருட்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்'' என்று முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார்.

SCROLL FOR NEXT