தமிழகம்

காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து தமிழகத்தில் நாளை முழு அடைப்பு: அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள் ஆதரவு

செய்திப்பிரிவு

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் நாளை (சனிக்கிழமை) முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகே தாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் கர்நாடக அரசு அணைகள் கட்டுவதை கண்டித்து, கடந்த 21-ம் தேதி சென்னை யில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு நடத்திய இந்தக் கூட்டத்தில், கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியைத் தடுக்க வேண்டும், மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் 28-ம் தேதி (நாளை) முழு அடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடக்கிறது. போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தமாகா, மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

முழு அடைப்புப் போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்றும், அரசும் இதற்கு ஆதரவு தரவேண்டும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், லட்சக்கணக் கான வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற் பார்கள் என்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் த.வெள்ளையன், தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆகி யோர் தனித்தனியே அறிவித்துள் ளனர். அதேபோல, 28-ம் தேதி லாரிகள் இயக்கப்படாது என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி அறிவித்துள்ளார்.

மேலும், டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்து முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தொமுச, ஐஎன்டியுசி, சிஐடியு, எச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் தெரிவித்துள்ளன.

முதல்வருடன் சந்திப்பு

இந்நிலையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று சந்தித்துப் பேசினர். பின்னர் நிருபர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், “போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்று முதல்வ ரிடம் வலியுறுத்தினோம். காவிரி டெல்டா விவசாயிகளின் பாதிப் புகள் பற்றி முதல்வர் நன்கு உணர்ந் துள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், வணிகர் அமைப் புகள், விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் நாளைய போராட்டம் முழு வெற்றி பெறும்” என்றார்.

முழு அடைப்புப் போராட்டத்தை யொட்டி, தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT