‘டான்செட்’ நுழைவுத்தேர்வு முடிவை ஏப்ரல் இறுதியில் வெளியிட அண்ணா பல்கலைக் கழகம் முடிவுசெய்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.பிளான். இடங்களை நிரப்ப தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (டான்செட்) நடத்தப்படுகிறது.
வரும் கல்வியாண்டுக்கான (2014-15) டான்செட் நுழைவுத்தேர்வு மார்ச் 22, 23-ம் தேதிகளில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 15 மையங்களில் நடந்தது. எம்.சி.ஏ. நுழைவுத்தேர்வை 10,817 பேர், எம்.பி.ஏ. நுழைவுத்தேர்வை 32,684 பேர், எம்.இ., எம்.டெக்., எம்.பிளான். படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை 50,016 பேர் எழுதியுள்ளனர்.
பொதுக் கலந்தாய்வு:
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மாணவர் சேர்க்கையைப் பொருத்தவரை, அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. தனி யார் சுயநிதி சிறுபான்மைக் கல்லூரிகளில் 30 சதவீத இடங் களும், சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 50 சதவீத இடங் களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.
அதேநேரம் தனியார் கல்லூரிகளின் எம்.இ., எம்.டெக். இடங்களுக்கு இதுபோன்ற சதவீதம் நிர்ணயிக்கப்படவில்லை. விருப்ப அடிப்படையில் அவர்கள் அரசிடம் ஒப்படைக்கப்படும் இடங்கள் மட்டும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.
கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட மேற்கண்ட நடைமுறைதான் எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் இந்த ஆண்டும் கடைபிடிக் கப்பட உள்ளது.
விடைத்தாள் மதிப்பீடு :
மும்முரம் டான்செட் நுழைவுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு பணி அண்ணா பல்கலைக்கழகத்தில் மும்முரமாக நடந்துவருகிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் இறுதியில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு டான்செட் பொது நுழைவுத்தேர்வு செயலாளரும், அண்ணா பல்கலைக்கழக இயக்குநருமான (நுழைவுத் தேர்வுகள்) பேராசிரியர் எஸ்.ராஜேந்திர பூபதி தெரிவித்தார். இதற்கிடையே, எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் பொதுக் கலந்தாய்வுக்கு ஒப்படைக் கப்படும் இடங்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு அனைத்து தனியார் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கடிதம் அனுப்பியிருக்கிறது.