போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 3-ம்கட்ட பேச்சுவார்த்தை நேற்று சுமுகமாக நடந்தது. இதில் ஓய்வூதியத் திட்டம், பதவி உயர்வு, சேம நலநிதி திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது. ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆய்வு நடத்தி முடிவு செய்யப்படும் என அரசுத் தரப்பு உறுதி அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் 1.43 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். ஊழியர்களுக்கு 12-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக ஏற்கெனவே 2 கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ள நிலையில், 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பணிமனையில் காலை 10 மணிக்கு தொடங்கிய பேச்சு மதியம் 1 மணி வரை நடந்தது.
இதில் போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் பிரபாகர ராவ், நிதித் துறை துணைச் செயலாளர் பிரசாத் வாஹான்கர், போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் உட்பட 14 பேர் கொண்ட குழுவினர் கலந்துகொண்டனர். தொழிற்சங்கங்கள் சார்பில் தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், பொருளாளர் நடராஜன், அதிமுக தொழிற்சங்கத் தலைவர் சின்னச்சாமி எம்எல்ஏ, சிஐடியூ தலைவர் சவுந்தரராஜன் எம்எல்ஏ, பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார், தேமுதிக தொழிற்சங்கத் தலைவர் சவுந்திரபாண்டியன் உட்பட 42 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர்.
போக்குவரத்து தொழிலாளர் களுக்கு ஓய்வூதியம் வழங்கு வதில் உள்ள சிக்கல்கள், ஏற்கெனவே வழங்கப்பட்டுவந்த சேம நலநிதி திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல், பதவி உயர்வில் உள்ள குளறுபடிகளை அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டது. 3-ம் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்துள்ள நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 30-ம் தேதி நடத்தப்படும் என பேச்சுவார்த்தைக் குழுவினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கேட்டபோது சிஐடியூ துணைத் தலைவர் சந்திரன், ஏஐடியூசி பொதுச் செயலாளர் லட்சுமணன் கூறிய தாவது:
போக்குவரத்துக் கழகத்தில் தொழிலாளிகள் - நிர்வாகம் பங் களிப்புடன் ஏற்கெனவே உள்ள ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 2003 ஏப்ரல் 1-ம் தேதி முதல் பணியில் சேருவோருக்கான மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டம், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு பொருந்தாது என்பதை எடுத்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். தொழில்நுட்ப பிரிவு அலுவலர் களுக்கு பதவி உயர்வு, வாரிசு அடிப்படையில் சேர்ந்த வர்களுக்கு தகுதி அடிப்படையில் பதவி உயர்வு என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளோம்.
ஓய்வூதிய திட்டத்தில் உள்ள பிரச்சினை குறித்து ஆய்வு நடத்தி முடிவு செய்யப்படும். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த ஓரிரு நாளில் துணை கமிட்டி அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். இக்குழுவில் தொழிற்சங்கங்கள் சார்பில் 4 பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசுவார்கள். 30-ம் தேதி நடக்க வுள்ள அடுத்தகட்ட பேச்சுவார்த் தையில் விரிவாக பேசலாம் என குழுவினர் உறுதி அளித்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜன் கூறும்போது, ‘‘2003-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த 54 ஆயிரம் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள பிரச்சினை, ஏற்கெனவே உள்ள ஓய்வூதிய அறக்கட்டளையில் நிதி பற்றாக்குறையைப் போக்குவது, சேம நலநிதி திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விரிவாக பேசினோம்.
இந்த 12-வது ஊதிய ஒப்பந்தத்தில் 50 சதவீத ஊதிய உயர்வு கேட்டு அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் பேசவுள்ளோம்’’ என்றார்.