தமிழகம்

தமிழகத்தில் சித்தா பல்கலை. கொண்டு வர வேண்டும்: உலக சித்தர் மாநாட்டில் நீதிபதி தமிழ்வாணன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் சித்தா பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். நம் பாரம்பரிய மூலிகைகளுக்கு காப்புரிமை பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ச.தமிழ்வாணன் கூறினார்.

சித்த மருத்துவத்தின் மகத்து வத்தைப் பரப்பும் வகையில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் தமிழ்ப் புத்தாண்டு தினம் உலக சித்தர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 6-வது உலக சித்தர் மாநாடு சென்னை தி.நகரில் உள்ள ஜெர்மன் ஹால் மையத்தில் மருத்துவர் ஜி.வேலுச்சாமி தலைமையில் திங்கள்கிழமை நடந்தது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சித்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டைத் தொடங்கி வைத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ச.தமிழ்வாணன் பேசுகையில், ‘‘தமிழகத்தில் புகழ்பெற்ற 15 சித்தர் கள் இருந்தார்கள். தற்போது உள்ள ஆயுர்வேதம், ஆங்கில வழி மருத்துவம் அனைத்துக்கும் அடிப் படை சித்த மருத்துவம்தான். சித்த மருத்துவத்தில் 108 நாடி நிலைகளைச் செல்லி இருக்கிறார்கள். நம் நாட்டின் இயற்கை வளங்களை வேறு சிலர் காப்புரிமை பெற்று வைத்துள்ளனர். அதேபோல நம் நாட்டின் மூலிகை மருந்துகளுக்கு நாம் காப்புரிமை பெறவேண்டும். சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் வகையில் தமிழகத்தில் சித்தா பல்கலைக்கழகம் கொண்டுவர வேண்டும்’’ என்றார்.

‘‘இன்றைய வேகமான வாழ்க்கைச் சூழலில் உள்ள மக்களுக்குச் சித்தர்களின் வாழ்க்கை முறையை எடுத்துச் சொல்ல வேண்டும். சித்த மருத்துவ முறைகளை ஆராய்ச்சி செய்வதுபோல, சித்தர்களின் வாழ்க்கை முறைகளையும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்’’ என்று முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் குத்சியா காந்தி கூறினார்.

சித்த மருத்துவத்தில் பத்ம விருது பெற்ற ஜே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஆண்டு மலர் மற்றும் ‘நலம் தரும் நாட்டு மருத்துவம் 400’ ஆகிய நூல்களை வெளியிட்டார்.

SCROLL FOR NEXT